மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் தாசில்தார் வழங்கினார்

மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் தாசில்தார் வழங்கினார்.

Update: 2021-06-13 15:58 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஜெயலட்சுமி (வயது 23). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருடன் அதே ஆம்புலன்சில் அவருடைய மாமியார் செல்வி (50), நாத்தனார் அம்பிகா (32) உள்ளிட்டவர்கள் சென்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் அருகே சென்றபோது எதி்ர்பாராவிதமாக ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் இறந்த ஜெயலட்சுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், செல்வி, அம்பிகா குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி 3 பேரின் குடும்பத்திற்கு தாசில்தார் சையது காதர் நேரில் சென்று நிவாரணம் வழங்கினார். அப்போது வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்