கொடைக்கானல் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
கொடைக்கானல் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானல் :
கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா தலைமையிலான போலீசார் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வீடு் கட்டி குடியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது குருசடி பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 57) என்பவர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 3 லிட்டர் சாராய ஊறல் மற்றும் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.