ஆம்பூர் அருகே கார் விபத்தில் 2 பாதிரியார்கள் பலி
ஆம்பூர் அருகே நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கார்விபத்தில் 2 பாதிரியார்கள் பலியானார்கள்.
ஆம்பூர்
துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்
பெங்களூருவை அடுத்த ஈதனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சாந்தன் (வயது 62), தாவீது (61), விக்டர் மோகன் (64). 3 பேரும் பாதிரியார்கள். இவர்களது நண்பர் சென்னையில் பாதிரியாராக உள்ளார். அவர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதையடுத்து சாந்தன், தாவீத், விக்டர்மோகன் ஆகிய 3 பேரும், நண்பரின் இறுதி சடங்கில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னைக்கு காரில் சென்றனர். காரை சாந்தன் ஓட்டி சென்றார்.
அங்கு இறுதி சடங்கு முடிந்ததும் இரவில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கிளி தேசிய நெடுஞ்சாலை வழியாக நள்ளிரவு 1 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது. வெங்கிளி அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பிகள் மீது மோதி, அருகில் இருந்த புதருக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
2 பாதிரியார்கள் பலி
இந்த விபத்தில் தாவீது, விக்டர்மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாந்தனை அப்பகுதி மக்கள் காரின் இடிபாட்டில் இருந்து மீட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காயம் அடைந்த சாந்தனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் பலியான தாவீது, விக்டர்மோகன் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.