தூத்துக்குடி மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Update: 2021-06-13 13:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

டாஸ்மாக் திறப்பு

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளும் இன்று (திங்கட்கிழமை) திறப்பதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். 

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் வழியாக வரிசையாக சென்று மதுபானங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

அதே போன்று 20 பேருக்கு மேல் கூட்டம் இருந்தால், உடனடியாக டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வரிசைப்படி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் கடைகளில் போதுமான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் குடோன் காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. அங்கு இருந்து கடைகளுக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு உள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்