பல்வேறு இடங்களில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது

பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கர்நாடகத்தில் இருந்து மது கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-13 00:24 GMT
ஈரோடு
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கர்நாடகத்தில் இருந்து மது கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 
வாகன சோதனை
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு்ள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது வாங்கிக்கொண்டு அதை அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களில் கடத்தி தமிழகத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் மாநில சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் சோதனைச்சாவடியில் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், ஜான் பொன்னையன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
அதில் 71 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பதும், அவர் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 71 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கே.என்.பாளையம்
இதேபோல் பங்களாப்புதூர் போலீசார் நேற்று கே.என்.பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த ஒரு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (31), கே.என்.பாளையத்தை சேர்ந்த சிவபிரகாஷ் (33) ஆகியோர் என்பதும், 2 பேரும் கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு தமிழகத்துக்கு விற்பதற்காக வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 மது பாக்கெட்டுகள், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் குமரன் கோவில் கரடு செல்லும் வழியில் பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில் மோட்டார்சைக்கிளில் வந்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) பிடித்து விசாரித்தபோது அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது வாங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 மதுபாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் சிலர் கள்ளத்தனமாக கர்நாடக மது விற்பனை செய்து வருவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கர்நாடக மாநிலத்ைத சேர்ந்த 16 சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் காய்கறி வியாபாரியான நந்தினி (29) என்பவர் தனது சரக்கு வேனி்ல 105 மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரிடம் இருந்தும் 121 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவபிரகாசையும், நந்தினியையும் கைது செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியாக்கவுண்டனூர் பகுதியில் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் போஜராஜன் (29) என்பதும், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக  மதுவை வாங்கி வந்து இங்கு விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அன்பழகன் வீதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 30) என்பதும், அவர் கர்நாடக மது பாட்டில்களை விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்