ஒரே நாளில் 80 மையங்களில் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து ஒரே நாளில் 80 மையங்களில் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 20:48 GMT
தஞ்சாவூர்;
மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து ஒரே நாளில் 80 மையங்களில் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவியதால் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள அதிகஅளவில் வந்தனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா தடுப்பூசி மையங்கள் என 117 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
4 நாட்களுக்கு பிறகு
தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால் கடந்த 8-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்ததால் சில மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. நேற்று கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் 4 நாட்களுக்கு பிறகு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.
80 மையங்கள்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இங்கு 400 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக டோக்கன் வினியோகிப்பட்டதில் ஒரு மணிநேரத்தில் அனைத்து டோக்கன்களும் காலியாகிவிட்டன. பின்னர் மையத்திற்கு வெளியே அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. அதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான டோக்கன் காலியாகிவிட்டதால் நாளை (அதாவது இன்று) காலை 7 மணிக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 80 மையங்கள் மூலம் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொருத்து தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்