தர்மபுரி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்-சிகிச்சை பெற்றவரின் உறவினர்கள் தாக்க முயன்றதாக புகார்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரின் உறவினர்கள் தாக்க முயன்றதாக பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
தாக்க முயற்சி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் நவலை பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிற்றுப்பகுதியில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கீர்த்தனா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அந்த குழாயை பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் அகற்றியதாகவும், அப்போது வலி தாங்காமல் கீர்த்தனா சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கீர்த்தனாவின் உறவினர்கள் அங்கு சென்று அந்த பயிற்சி டாக்டரிடம் கேட்டு உள்ளனர். அப்போது கொரோனா தொற்று பரவி வருவதால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு உறவினர்கள் வரக்கூடாது என்று அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் பணியை முடித்து விட்டு வெளியேறிய அந்த பயிற்சி டாக்டரிடம் கீர்த்தனாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் நேற்று காலையிலும் பயிற்சி டாக்டர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தர்மபுரி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பயிற்சி டாக்டரை தாக்க முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பயிற்சி டாக்டர்களின் போராட்டம் நேற்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி மற்றும் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.