காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி கொலை வழக்கில் மனைவி உள்பட 6 பேர் கைது; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
காவேரிப்பட்டணத்தில் கூழ் வியாபாரி கொலை வழக்கில் மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
காவேரிப்பட்டணம்:
கூழ் வியாபாரி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேனோடைநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூழ் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அவர் கூழ் வியாபாரம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவேரிப்பட்டணம் வேங்கைநகர் பகுதியில் அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென கட்டையால் அடித்து ராஜேந்திரனை கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர் தீர்த்து கட்டப்பட்டது அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கள்ளக்காதல்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு 3 மனைவிகள். முதல் மனைவி ஜெயா (45), 2-வது மனைவி தவமணி (38). 3-வது மனைவி முனியம்மாள் (35). இதில் முதல் 2 மனைவிகளும் குடும்ப பிரச்சினையால் பிரிந்து சென்று விட்டனர். இதனால் ராஜேந்திரன் 3-வது மனைவி முனியம்மாளுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
முனியம்மாளுக்கும், இவருடைய உறவினரான குமார் (33) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. குமார் கனகமுட்லு அருகே உள்ள மேலேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர். செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி முனியம்மாளை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்.
தீர்த்து கட்ட முடிவு
இந்த கள்ளக்காதல் ராஜேந்திரனுக்கு தெரியவந்ததால், முனியம்மாளை அவர் கண்டித்தார். இதுகுறித்து முனியம்மாள், குமாரிடம் தெரிவித்தார். மேலும், ‘நமது கள்ளக்காதலுக்கு எனது கணவர் இடையூறாக இருக்கிறார், அவரை தீர்த்துக்கட்டினால் தான் நாம் உல்லாசமாக இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரனை தீர்த்தக்கட்ட முனியம்மாள் உதவியுடன், குமார் திட்டம் தீட்டினார்.
அதன்படி ராஜேந்திரன் தினமும் அதிகாலை கூழ் விற்பனை செய்ய காவேரிப்பட்டணம் செல்வதை அறிந்து, வழியில் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை குமார் தனது கூட்டாளிகளான தேனோடைநகரை சேர்ந்த பவுன்ராஜ் (25), குட்டூர் வடிவேல் (25), ரகு (23), கவட்டையன் என்கிற பார்த்திபன் (25), கீழ்புதூர் புட்டுகரியன் என்கிற சதீஷ் (19), மலையாண்டஅள்ளி பொன்நகர் திருப்பதி (25) ஆகியோருடன் வேங்கைநகரில் பதுங்கி இருந்தார்.
6 பேர் கைது
அப்போது அந்த வழியாக வந்த ராஜேந்திரனை அவர்கள் வழிமறித்து தாக்கி, கட்டையால் அடித்துக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முனியம்மாள், கள்ளக்காதலன் குமார், இவரது கூட்டாளிகள் பவுன்ராஜ், திருப்பதி, ரகு, கவட்டையன் என்கிற பார்த்திபன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வடிவேல், புட்டுகரியன் என்கிற சதீஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவேரிப்பட்டணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.