கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம்; பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுக் கொண்டனர்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுக் கொண்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. களக்காடு புதிய பஸ் நிலையத்தில் களக்காடு நகரப்பஞ்சாயத்து, திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி போடவந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்தனர். இதையடுத்து களக்காடு போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் பேரூராட்சி, சுகாதார துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். வள்ளியூர் வட்டார அரசு மருத்துவர் கோலப்பன் தலைமையில் பணகுடி அரசு மருத்துவர்கள் தேவ் மகிபன், சொக்கலிங்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் வள்ளியூர் வட்டார பகுதிகளில் 6 மையங்களில் மருத்துவ குழுவினரால் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டாரம்
நாங்குநேரி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முனைஞ்சிப்பட்டி, சங்கனாங்குளம், தளபதி சமுத்திரம் மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்றது. நேற்று மட்டும் 500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமையில் அரசு டாக்டர்கள் கண்ணன், விக்னேஷ், கற்பகஜோதி, முத்துலட்சுமி, சித்தார்த்தன், ஆண்டனி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.