விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு பெயிண்ட் அடித்த பொதுமக்கள்
மஞ்சநாயக்கனூரில் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு பொதுமக்கள் பெயிண்ட் அடித்தனர்.
பொள்ளாச்சி
மஞ்சநாயக்கனூரில் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு பொதுமக்கள் பெயிண்ட் அடித்தனர்.
அடிக்கடி விபத்துகள்
பொள்ளாச்சி அருகே நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்த நிலையில் வளைவான பகுதி, முக்கிய சாலைகள், சந்திப்பு உள்ளிட்ட விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியும் வகையில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கவில்லை.
இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். மேலும் நா.மூ.சுங்கம் அருகே மஞ்சநாயக்கனூர் ஆத்துப் பாலம் அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வீடுகளில் இருந்து பெயிண்ட் எடுத்து வந்து வேகத்தடையின் மீது அடித்தனர்.
அறிவிப்பு பலகை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூர் ஆத்துப்பாலம் உள்ள பகுதி மிகவும் வளைவானதாகும். இதனால் சாலை அகலப்படுத்தும் பணியின்போது, விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை இருப்பதற்காக எந்தவித அடையாளத்தையும் அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை.
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
எனவே வேகத்தடை அமைக்கும் அதிகாரிகள் அதன் மீது வெள்ளை நிற கோடு வரைதல் மற்றும் அறிவிப்பு பலகையை வைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.