கோத்தகிரி அருகே 260 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
கோத்தகிரி அருகே 260 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உயிலட்டியில் உள்ள பேட்டலாடா பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மனோகரன் தலைமையிலான போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மேரக்காய் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக 260 லிட்டர் ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து சாராய ஊறல் வைத்திருந்த அரசு(வயது 42) என்பவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாராய வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.