தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் நிலையத்தில் 18 வயது மகள் புகார் மனு
தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் 18 வயது மகள் புகார் மனு அளித்துள்ளார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
மந்திரவாதி போர்வையில் சபல புத்தி உள்ள தனது தந்தை தன்னை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார். தனது தங்கைக்கும் ஒரு முறை பாலியல் தொந்தரவு கொடுத்தார்,
இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நான் கொடுத்த புகாரை வாங்காமல் என்னுடைய தந்தை அவரை தாக்கியதாக கொடுத்த பொய் புகாரின் பேரில் எனது அண்ணனை போலீசார் கைது செய்துவிட்டனர். என்னையும் கைது செய்ய முயற்சிக்கின்றனர். என்னுடைய தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத கேளம்பாக்கம் போலீசார் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல் துறை தலைவர், வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி., தேசிய மனித உரிமைகள் ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோருக்கும் அவர் தனித்தனியாக புகார் மனு அனுப்பியுள்ளார்.