மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறிய ‘டிப்-டாப்’ வாலிபரிடம் போலீசார் விசாரணை
மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறிய ‘டிப்-டாப்’ வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சேலம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் ஒன்றில் ‘டிப்-டாப்’ உடை அணிந்த வாலிபர் ஒருவர் ஏற முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபரின் பெயர் வெங்கடேசன் என்றும், சேலம் களரம் பட்டியைச் சேர்ந்தவர் என்றும் முதல்-அமைச்சரை பார்க்கும் ஆர்வத்தில் பாதுகாப்பு வாகனத்தில் ஏறி விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து பாதுகாப்பு போலீசார் வெங்கடேசனுக்கு அறிவுரை கூறி அஸ்தம்பட்டி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்-அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் திடீரென்று வாலிபர் ஒருவர் ஏறியதால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.