திருச்சி வந்த விமானத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்; 3 பயணிகளிடம் தொடர் விசாரணை
துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
செம்பட்டு,
துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் மாலை வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளை அதிகாரிகள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
4 கிலோ தங்கம் பறிமுதல்
அப்போது அவா்கள், கொண்டு வந்த வீட்டு உபயோகப்பொருட்களை சோதனை செய்தபோது அதில் சுமார் 4 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி ஆகும். ஊரடங்கு காலங்களில் கடந்த சில நாட்களாக தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிக அளவிலான தங்கத்தை கடத்தி வந்து இருப்பது திருச்சி விமான நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.