கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் மீண்டும் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன.
இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. எனவே, தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது.
14,300 டோஸ் கோவிஷீல்டு
இந்த நிலையில் நேற்று 14,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வரப்பெற்றுள்ளது. எனவே, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடர்ந்து 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படும்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் என 4 கோட்ட அலுவலங்களிலும், 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செலுத்தப்படுகிறது.
ஊரக பகுதியில் நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி, சிறுகாம்பூர், புதூர்உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம் ஆகிய 14 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி போட விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இம்முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
2 ஆயிரம் டோஸ் கோவேக்சின்
திருச்சி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் வந்தன. இதில் திருச்சி மாநகராட்சிக்கு 1500 தடுப்பூசிகளும், மணிகண்டம் மற்றும் திருவெறும்பூருக்கு 500 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை காந்தி மார்க்கெட்டில் 18- 44 வயதிற்குட்பட்ட மளிகை கடை வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மணிகண்டம் பகுதியில் பார்வையற்றோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. மற்றும் திருவெறும்பூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராம்கணேஷ் தெரிவித்துள்ளார்.