தமிழகத்தில் 45 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

தமிழகத்தில் 45 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

Update: 2021-06-11 18:55 GMT
திருப்பத்தூர்,

தமிழகத்தில் 45 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

45 நாட்களில்...

திருப்பத்தூர் பிரபாகர் காலனியில் வருவாய்த்துறை சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பயனாளிகளுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கி பேசியதாவது-
. உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் 2-வது அலையை 45 நாட்களில் கட்டுக்குள் வரும் நிலையை உருவாக்கியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட நாட்கள் வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்ட கொரோனா தொற்றை 2 வார கால முழு ஊரடங்கு மூலம் கட்டுக்குள் வரும் நிலையை உருவாக்கியது முதல்-அமைச்சரின் கடுமையான உழைப்பு. அது மட்டுமல்லாமல் அவர் தமிழகத்தின் மாவட்டந்தோறும் தொடர் சுற்றுப்பயணம் செய்து களப்பணி மேற்கொண்டதன் காரணமாக இன்று அனைத்து மாநிலங்களும் வியக்கும் வகையில் தமிழகம் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கி வருகிறது.

357 குடும்பங்களுக்கு.."

 தற்போது கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு 2-வது கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 14 வகையான பொருட்கள் ஒரு சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. அதேபோல் குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதற்காக தமிழக முதல்-அமைச்சரால் புதிய திட்டம் தொடங்கப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வறுமைக்கோட்டில் உள்ள மொத்தம் 357 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் நிவாரண பொருளான அரிசி வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் தாசில்தார் ஜெயந்தி, திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், துணை தாசில்தார் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்