கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கேர்பன், கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் முழு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கேர்பன், கன்னிகா தேவி காலனி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்தனர்.
மேலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் ஆய்வு செய்ததுடன், அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.