வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2021-06-11 17:09 GMT
வடலூர், 

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், வடலூரில் சத்திய ஞானசபையை சர்வதேச மையமாக மாற்றுவோம், யோகா, தியானம் உள்ளிட்டவைகள் செய்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு் வருகிறது. 


 அமைச்சர்கள் ஆய்வு

 அதன்படி, வடலூரில் உள்ள சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பதற்காக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வடலூர் வந்து ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு சர்வதேச மைய அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச மையமாக தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு உலக அளவில் கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டு வெகு விரைவில் சர்வதேச மைய பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்ஜீனியர்  சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள், சன்மார்க்க ஆர்வலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்