அமராவதி ஆற்று பாலம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கூறியதாவது:-
இறைச்சிக்கழிவுகள்
மடத்துக்குளம் பகுதியில் பழமை வாய்ந்த அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியே திண்டுக்கல் -கோவை தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டில் உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆற்றுப் பாலம் அருகே குவியல் குவியலாக தொடர்ந்து இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் பகுதியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு முறை, அமராவதி ஆற்றுப் பாலம் அருகே குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பைத்தொட்டிகள் ஒன்று கூட பேரூராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை.
நோய் பரவும் அபாயம்
அமராவதி ஆற்றுப்பாலம் வழியே தினந்தோறும் வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி, கேரளா, கோவை, பொள்ளாச்சி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து, பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பாதையாத்திரை பக்தர்கள் என பல தரப்பினரும் கடுமையான சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் அபாயமும், பல்வேறு நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே உடனடியாக மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளுக்கு, நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சாலையோர பூங்காவாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை செய்யப்படும்.
இவ்வாறு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினர்.