கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்த விவசாயி பலி
மின்மோட்டாரை பழுது நீக்க இறங்கியபோது, கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்த விவசாயி பலியானார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள எம்.குரும்பபட்டியை சேர்ந்தவர் பிச்சையாண்டி (வயது 39). விவசாயி. அவருடைய தோட்டத்து கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானது. இதனால் பழுது நீக்கம் செய்வதற்காக நேற்று மெக்கானிக் வந்தார்.
முதலில் கயிறு மூலம் 50 அடி ஆழகிணற்றுக்குள் மெக்கானிக் இறங்கி விட்டார். அதைத்தொடர்ந்து கயிற்றை பிடித்தபடி பிச்சையாண்டி கிணற்றுக்குள் இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்தது. இதில் கிணற்றில் உள்ள பக்கவாட்டு பகுதியில் பிச்சையாண்டி தலை மோதியது. இ்தில் படுகாயம் அடைந்த அவர் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பிச்சையாண்டியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 50 அடி ஆழ கிணற்றில் 5 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.