கூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது

கூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-09 14:49 GMT
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதிகளில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது ஏகலூத்து சாலையில் 18-ம் கால்வாய் அருகே 2 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட 2 பேரும் கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்த தங்கம் மகன் சூர்யா (வயது 23), முத்தையர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து மான் இறைச்சியை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து கம்பம் மேற்கு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
பிடிபட்ட 2 பேரும் மானை வேட்டையாடி இறைச்சியை கொண்டு வந்தார்களா அல்லது வேறு யாரிடமாவது இறைச்சியை வாங்கி வந்தார்களா என்று கம்பம் மேற்கு வனச்சரகர் அன்புராஜன் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்