விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா பொம்மை

திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் வைத்துள்ள கொரோனா பொம்மையை பொதுமக்கள் திகிலுடன் பார்த்து செல்கின்றனர்.

Update: 2021-06-09 14:40 GMT
திண்டுக்கல்:

 விழிப்புடன் இருந்தால் விரட்டலாம்

கொரோனா என்ற ஒற்றை சொல்லை உச்சரித்தாலே உலக நாடுகள் எல்லாம் அலறி கொண்டிருக்கின்றன. கொத்துக்கொத்தாய் மனித உயிர்களை வேட்டையாடும் கொரோனாவை, பூலோகத்தில் இருந்து விரட்டி அடிக்க ஒட்டு மொத்த நாடுகளும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

விழிப்புடன் இருந்தால் மட்டுமே, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உயிர் தப்பிக்கலாம் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆகி விட்டது. இதனால் தான் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 

குறிப்பாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுதல், தடுப்பூசி போடுதல் என்பவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

  கொரோனா பொம்மை 

அதன்படி திண்டுக்கல் போக்குவரத்து போலீசார் சார்பில், சற்று வித்தியாசமான முறையில் கொரோனா பொம்மை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில், கொலைவெறி பிடித்த கொரோனாவை அரக்கன் போன்று சித்தரித்து பொம்மை ஒன்று நேற்று வைக்கப்பட்டது. 

பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாக்குடன் அரக்கன் போல் கொரோனா வைரஸ் உள்ளது. 

அதன் பக்கவாட்டு பகுதியில் ரத்தம் கக்கி மனிதர்கள் இறந்து கிடக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கொரோனா அரக்கனின் காலடியில் எலும்புக்கூடுகள் கிடக்கின்றன.

 விழிப்புணர்வு பிரசாரம்

திண்டுக்கல் நகரின் மையப்பகுதில் நிறுவப்பட்டுள்ள கொரோனா பொம்மையை திகில் கலந்த பயத்துடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். 

போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா பொம்மை மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமை தாங்கி, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்