ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல்- அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-08 21:49 GMT
ஈரோடு
ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அதில், ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஈரோட்டில் ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி விசைத்தறிக்கூடங்கள் இயக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது.
இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
சீல் வைப்பு
இந்த திடீர் சோதனையில் வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு தொழிலாளர்கள் முக கவசம் அணியாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரிய  வந்தது. இதைத்தொடர்ந்து அந்த விசைத்தறிகளின் செயல்பாட்டை நிறுத்திய அதிகாரிகள் தொழிலாளர்களை வெளியில் அனுப்பிவிட்டு, விசைத்தறிக்கூடங்களுக்கு சீல் வைத்தனர். மொத்தம் 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதற்காக விசைத்தறிக்கூட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்