சேலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரர் பணி நீக்கம் போலீஸ் கமிஷனர் உத்தரவு

சேலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரரை பணி நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

Update: 2021-06-08 21:33 GMT
சேலம்:
சேலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரரை பணி நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
சாராயம் காய்ச்சி விற்பனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக வருகிற 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். 
இதனிடையே ஊரடங்கையொட்டி, சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பணி நீக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியில் வீராணம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய போது போலீசாரிடம் சிக்கினார். மேலும் வீட்டில் இருந்த 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கைதான விவேகானந்தன் சேலம் மாநகர ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றியது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் சாராயம் காய்ச்சிய விவேகானந்தனை பணி நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்