சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவலை கண்காணிக்கும் கால்நடை டாக்டர்கள்
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறதா? என்று கால்நடை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறதா? என்று கால்நடை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
உயிரியல் பூங்கா
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கடமான், குரங்கு, முதலை, நரி உள்பட விலங்குகளும் மற்றும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் நோய்தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொரோனா தொற்று பரவல் உள்ளதா? என கண்காணிக்க கால்நடை டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனை செய்யப்படும்
இந்த குழுவினர் விலங்குகள் மற்றும் பறவைகள் சரியாக உணவு சாப்பிடுகிறதா?, உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்படுகிறதா? என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் விலங்குகளுக்கு வழங்கப்படும் இறைச்சிகளும் நன்றாக சுடுநீரில் சுத்தம் செய்த பின்னர் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு வழங்கும் போது அதன் செயல்பாடு குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும் போது, ‘குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை கால்நடை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எந்த விலங்களுக்காவது உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை செய்யப்படும். மேலும் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.