சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்
மருவத்தூர் கிராமத்தில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளதால் அவசர சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குன்னம்:
சேதமடைந்த கட்டிடம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலையம் மூலம் மருவத்தூர், சித்தளி, பேரளி உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டப்பட்டு பத்து ஆண்டுகளிலேயே அந்த கட்டிடம் சேதமடைந்து விட்டது. அருகில் உள்ள கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கட்டிடம் சேதம் அடைந்ததாக தெரிகிறது. தற்போது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை கிடைக்காமல்...
இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து 33 ஆண்டுகள் ஆனால் மட்டுமே கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய கட்டிடம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது வெளி நோயாளிகளுக்கு, அருகில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பில் அடிப்படை சிகிச்சைக்கு மட்டும் மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேதமடைந்த கட்டிடம் மருந்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் அவசர சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தற்போது கர்ப்பிணிகள் அவசர சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புதிய கட்டிடம்
செவிலியர்கள் தங்கும் குடியிருப்புகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள் இக்கட்டான நிலையில் நாட்களை கடத்தி வருகின்றனர். செவிலியர்கள் மருத்துவமனைக்கு வெளியே வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.