ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேருக்கு முன் ஜாமீன்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகார வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-08 20:27 GMT
பெங்களூரு:

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகார வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோ விவகாரம்

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயற்சி நடப்பதாக கூறி, ரமேஷ் ஜார்கிகோளி சார்பில் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தலைமறைவு

இந்த 2 வழக்குகள் குறித்தும் தற்போது சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷ் ஜார்கிகோளியிடம் இளம்பெண்ணுக்கு ஆதரவாக இருந்து நரேஷ் கவுடா மற்றும் ஸ்ரவன் ஆகிய 2 பேரும் தான் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தாா்கள். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

2 பேருக்கு முன் ஜாமீன்

அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நரேஷ்கவுடா மற்றும் ஸ்வரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்றும் அந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது சிறப்பு விசாரணை குழு சார்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அதுபோல், நரேஷ்கவுடா, ஸ்வரன் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ஆபாச வீடியோ விவகாரத்திற்கும் 2 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயண், நரேஷ் கவுடா மற்றும் ஸ்வரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் 2 பேரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்