தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரணடாக கிருஷ்ணராஜ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

Update: 2021-06-08 20:25 GMT
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக கிருஷ்ணராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புகார்களை பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்ணை அறிவித்தார்.

பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சுகுணா சிங் மயிலாடு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணராஜ் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன், தென்காசி துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து வெற்றி பெற்று காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட் கோட்டங்களில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் திருவல்லிக்கேணி மற்றும் மாதவரத்தில் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

வாட்ஸ்அப் எண்

பின்னர் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காவல் தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருப்பார்கள். பொதுமக்கள் தங்களது குறைகளை இவர்களிடம் கூறலாம். அவ்வாறு கூறும்போது அந்தப் பிரச்சினைக்கு அங்கேயே தீர்வு காண முடிந்தால் அங்கேயே முடிக்கப்படும். அல்லது வழக்கு பதிவு செய்ய வேண்டி இருந்தால் உடனடியாக அங்கு ரசீது கொடுக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 93856 78039 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் பதிவு செய்யலாம். முதலமைச்சரின் தனிப்பிரிவு போல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இந்த எண் ஒரு தனிப்பிரிவு ஆகும். எனது அலுவலகத்தில் இந்த எண்ணை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் செய்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். புகார்கள் மட்டுமல்லாமல் மணல் கடத்தல், குடிபோதையில் தகராறு செய்பவர்கள் குறித்த விஷயங்கள் போன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து தகவல்களும் கொடுக்கலாம்.

பெண்கள்- குழந்தைகள் புகார்

இந்த மாவட்டம் புதிய மாவட்டம். இதன் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கொரோனா ஊரடங்கு முடிவடைந்தவுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். மாவட்ட கலெக்டருடன் இணைந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடும். அருகில் குற்றாலம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தென்காசி மாவட்டம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதனை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அது குறித்த புகார்களில் எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்