காரில் இருந்த 5 கிலோ தங்கம் மாயமான வழக்கில் போலி போலீஸ்காரர் கைது
காரில் இருந்த 5 கிலோ தங்கம் மாயமான வழக்கில் போலி போலீஸ்காரர் கைது
பெங்களூரு:
மங்களூருவை சேர்ந்த திலக் பூஜாரி என்பவரின் காரை கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவி மாவட்டம் எமகனமரடி போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அந்த காரில் 4 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காரை ஒப்படைக்கும்படி எமகனமரடி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் காரை மட்டும் போலீசார் ஒப்படைத்திருந்தனர். நகைகளை ஒப்படைக்கவில்லை. போலீசார் தான் அந்த நகைகளை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் திலக் பூஜாரிக்கு சொந்தமான காரில் இருந்த தங்க நகைகளை திருடியதாக மங்களூருவை சேர்ந்த கிரண் வீரனகவுடா பட்டீல் என்பவரை கைது செய்துள்ளனர். இவர், போலி போலீஸ்காரர் ஆவார்.
உயர் போலீஸ் அதிகாாிகளின் உதவியுடன் எமகனமரடி போலீஸ் நிலையம் முன்பாக நின்ற காரின் கண்ணாடி உடைத்து, உள்ளே இருந்த நகைகளை திருடிவிட்டு, எமகனமரடி போலீசார் திருடியதாக கூறி வழக்கை திசை திருப்பி அவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
கைதான கிரணை போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.