மருத்துவமனை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது
பெங்களூருவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு பெண் நர்சு தான் சிகிச்சை அளித்து, மருந்து போட வேண்டும் என்று கூறி மருத்துவமனை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு பெண் நர்சு தான் சிகிச்சை அளித்து, மருந்து போட வேண்டும் என்று கூறி மருத்துவமனை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் நர்சு தான்...
பெங்களூரு கக்கதாசரபுராவில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் 2 பேர் தாங்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கும்படியும் கூறியுள்ளனர்.
உடனே மருத்துவனை ஊழியரும், ஆண் நர்சுமான பிரசாத் அந்த வாலிபர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றதுடன், வாலிபர்களின் கையில் மருந்து போட்டு துணியால் சுற்றுவதற்கு முயன்றார்.
இந்த நிலையில், தங்களுக்கு பிரசாத் சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும், பெண் நர்சு ஒருவர் தான் தங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் 2 வாலிபர்களும் கூறினார்கள். இதற்கு அவர்களுடன் வந்த மற்ற 2 வாலிபர்களும் அதையே சொன்னார்கள்.
ஆனால் பெண் நர்சு இல்லை என்றும், நானே மருந்து போட்டு விடுவதாகவும் பிரசாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரசாத்துடன் 4 வாலிபர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
4 வாலிபர்கள் கைது
பின்னர் அந்த வாலிபர்கள், பிரசாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த காவலாளி, வாலிபர்களை பிடிக்க முயன்றார். அப்போது காவலாளி மீதும் வாலிபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஊழியர் பிரசாத் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்களது பெயர்கள் வினோத், சந்துரு, ஹேமந்த், கிரண்குமார் என்று தெரிந்தது.
இவர்களில் ஹேமந்த், கிரண்குமார் தான் பெண் நர்சு தான் தங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்தது தெரியவந்துள்ளது. கைதான 4 பேர் மீதும் பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.