மாட்டுத்தொழுவங்களாக மாற்றப்படும் புகையிலை குடோன்கள்

புகையிலை தொழில் நலிவடைந்த காரணத்தினால் புகையிலையை பதப்படுத்த கட்டப்பட்ட குடோன்கள் மாட்டுத்தொழுவங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 18:34 GMT
காங்கேயம்
புகையிலை தொழில் நலிவடைந்த காரணத்தினால் புகையிலையை பதப்படுத்த கட்டப்பட்ட குடோன்கள் மாட்டுத்தொழுவங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.
புகையிலைத்தொழில்
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் புகையிலை தொழில் பெரிய அளவில் நடந்து வந்தது. குறிப்பாக காங்கேயம், தாராபுரம், கொடுவாய், குண்டடம், ஒட்டன்சத்திரம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிகளில் புகையிலைத் தொழில் செழிப்பாக இருந்து வந்தது. இந்தத் தொழிலில் புகையிலையை பதப்படுத்தும் பணியில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பகுதி் மண்ணின் தன்மை, சீதோஷ்ண நிலை, நீர்வளம் உள்ளிட்டவை புகையிலை விளைச்சலுக்கு ஏற்றவகையில் இருந்ததால் புகையிலையை பணப்பயிராக கருதி விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். இப்பகுதியில் விளையும் புகையிலை செடிகள் அறுவடை செய்யப்பட்ட பின்பு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள குடோன்களுக்கு கொண்டு வந்து பதப்படுத்தப்பட்டு கேரளா மாநிலத்தின் கோட்டயம், செங்கனச்சேரி, கொல்லம், தமிழகத்தின் நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதிகளுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வந்தன.
பின்னர் ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பிரச்சினை, புகையிலை தொழிலில் இளைஞர்களுக்கு நாட்டம் இல்லாமல் போனது, புகையிலை பொருட்கள் மீதான அரசின் தடை உள்ளிட்ட காரணங்களால் தொழில் நலிவடைய தொடங்கியது. புகையிலை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போனது.
இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை கொடுத்து வந்த புகையிலை பதப்படுத்தும் குடோன்கள் மூடப்பட்டன. புகையிலை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேறு பணிகளை நாடிச்சென்றனர். தற்போது ஆங்காங்கே ஒரு சில குடோன்களில் மட்டுமே இப்பகுதிகளில் விளையும் குறைவான அளவு புகையிலையை வாங்கி பதப்படுத்தி வருகின்றனர். 
மாட்டுத் தொழுவங்கள்
எண்ணிலடங்காத புகையிலை பதப்படுத்தும் குடோன்கள் தற்போது கிராமப்புறங்களில் மாட்டுத்தொழுவங்களாகவும், நகர்பகுதிகளில் இருந்தது திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டு விட்டன. மேலும் கிராமப் பகுதிகளில் பலநூறு புகையிலைக் குடோன்கள் இடிந்துபோய் குட்டிச் சுவராகவும் காட்சியளிக்கின்றன.
இதுபற்றி 50 வருடங்களாக புகையிலை வியாபாரம் செய்துவந்தவர்கள் கூறியதாவது:-
புகையிலைத் தொழிலைப் பொருத்தவரை, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கையில் நடந்து வந்தது. அங்கிருந்து நம்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னால் இலங்கையிலிருந்து புகையிலை கொண்டுவர இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால் இங்கிருந்த வியாபாரிகள் இலங்கை சென்று தொழிலைக் கற்றுக்கொண்டு வந்து இங்கு செய்யத் தொடங்கினர்.
நலிவடையத்தொடங்கியது
தொழில் படிப்படியாக விரிவடைந்து ஆயிரக்கணக்கான புகையிலை பதப்படுத்தும் குடோன்கள் கொங்குமண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தது. எங்களுக்கு அடுத்து வந்த தலைமுறையினர் புகையிலைத் தொழிலில் ஆர்வம் காட்டாமல் போனதுடன், புகையிலை விவசாயிகளும் வேறு பயிர்களுக்கு மாறிப்போனதால் படிப்படியாக புகையிலைத் தொழில் நலிவடையத் தொடங்கியது.
 விவசாயிகளிடம் புகையிலையைக் கொள்முதல் செய்து அவற்றை குடோன்களில் வைத்து வேதாரண்யம், தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் கடல் தண்ணீரை கொண்டு வந்து பதப்படுத்துவோம். புகையிலை பதப்படுத்த கடல் தண்ணீர்தான் ஏற்றதாக இருக்கும். அறுவடை செய்யப்பட்ட புகையிலையை 8 மாதம் வரை குடோன்களில் வைத்து பல்வேறு நிலைகளில் பதப்படுத்த வேண்டும். பின்னர் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புவோம்.
நோய்கள் ஏற்படாது
இந்த புகையிலையை அதிகளவில் மீனவர்கள் பயன்படுத்துவர். வாரக்கணக்கில் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு குளிருக்கு இதமாக புகையிலையை பயன்படுத்துவர். புகையிலையை மென்று துப்பும் எச்சிலில் மீன்கள் வளர உதவும் நுண்ணுயிர்கள் இருப்பதாக கூறுவர். தவிர பாரம்பரிய வகையில் பதப்படுத்தும் இயற்கையான புகையிலையால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாது.
தற்போது மார்க்கெட்டில் விற்கப்படுகிற ரசாயனம் கலந்த புகையிலைப் பொருட்களால்தான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் தற்போது மீனவர்கள் ரசாயனம் கலந்த புகையிலைப்பொருட்களை மென்று கடலில் உமிழ்வதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அரசு ரசாயனம் கலந்த புகையிலைப்பொருட்களை தடைசெய்து பாரம்பரியமான புகையிலைக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் புகையிலைத்தொழில் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்