மத்திய மண்டலத்தில் பாலியல் தொந்தரவுகளை தடுக்க பள்ளி முதல்வர்களுடன் போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனை

பாலியல் தொந்தரவுகளை தடுக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர்களுடன் போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-06-08 18:24 GMT
திருச்சி, 

பாலியல் தொந்தரவுகளை தடுக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர்களுடன் போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பாலியல் புகார்

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் பிரச்சினைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க இயலாத சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான பள்ளிகள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இப்படி ஆன்-லைன் மூலம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் பாலியல் தொந்தரவு தரும் வகையில் நடந்து கொண்டதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன.

ஐ.ஜி. அறிவுரை

இதுபோன்ற புகார்கள் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் வராமல் இருப்பதற்காக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆன்-லைன் மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மண்டலத்தை சேர்ந்த 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் அவர்கள் மத்தியில் பேசிய ஐ.ஜி. பாலகிருஷ்ணன் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் அனைத்து வகுப்புகளையும் பள்ளி நிர்வாகங்கள் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கப்படும் பதிவுகளை பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக காவல்துறையின் செல்போன் எண்களை பள்ளி நிர்வாகங்கள் தெளிவாக தெரிவித்து இருக்க வேண்டும்.

 பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்கள் வர பெற்றால் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி தவறு நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் போக்சோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகங்கள் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 
அந்த இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண் மற்றும் பெயர் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-

திருச்சி மாவட்டம்- 9498177954 (யசோதா), 
புதுக்கோட்டை - 9498158812 (ரசியா சுரேஷ்), 
கரூர் மாவட்டம்- 8300054716 (சிவசங்கரி), 
பெரம்பலூர்- 9498106582 (அஜீம்),
அரியலூர் - 9498157522 (சிந்துநதி),
தஞ்சாவூர் - 9498107760 (கலைவாணி),
திருவாரூர் - 9498162853 (ஸ்ரீபிரியா), 
நாகப்பட்டினம் - 9498110509 (ரேவதி),
மயிலாடுதுறை - 9498157810 (சித்ரா).

மேலும் செய்திகள்