சூளகிரியில் பரிதாபம்: தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 டிரைவர்கள் பலி

சூளகிரியில் தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-06-08 18:15 GMT
சூளகிரி:
மோட்டார் சைக்கிள் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சென்னபள்ளி கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா என்பவரது மகன் ஹரீஷ் (வயது 26). இவருடைய நண்பர் சின்னசென்னப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி (38). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஹரீசும், வெங்கடாசலபதியும் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு ஓசூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்னப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வழியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக பகுதியில் பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதியது. அவர்கள் 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர்கள் பலி
இதில் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த வெங்கடாஜலபதியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடாஜலபதி இறந்தார். விபத்தில் டிரைவர்கள் 2 பேர் இறந்தது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்