அரசு ஆஸ்பத்திரிக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்
அரசு ஆஸ்பத்திரிக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்
கோவை
கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் நாகராஜனிடம் வழங்கினார்.
ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்
கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வாங்கப்பட்டன. அவற்றை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நாகராஜனிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார்.
அப்போது முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது
நாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி எல்லா சூழ்நிலைகளிலும் பொதுமக்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து மக்களை தொடர்பு கொண்டு குறைகள் மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து கேட்டு அறிந்து வருகிறார்கள்.
மக்களை பாதுகாக்க வேண்டும்
இதனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டரிடம் 25 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கி உள்ளோம்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களை குறிவைத்து தி.மு.க. அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியான செயலாகும். பொய் வழக்குகள் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிகளவு கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். எனவே அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
கொரோனாவால் இறந்தவர்களுக்கு அரசின் இழப்பீடு பெறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்காக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை தொற்று பாதிப்பு இல்லை என்று சான்று கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க.வினர் தலையீடு
கோவை மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்று தட்டுப்பாடு இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி போடும் மையங்களிலும், ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கு வதில் தி.மு.க.வினரின் தலையீடு உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே தி.மு.க.வினர் தலையீட்டை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை யில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலெக்டர் நாகராஜன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கோவை மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நல பணிகளை மேற்கொள் ளும் போது போலீசார் இடையூறாக இருப்பதும், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.