தனியார் மருத்துவமனை மீது மேலும் ஒரு புகார்

தனியார் மருத்துவமனை மீது மேலும் ஒரு புகார்

Update: 2021-06-08 17:46 GMT
கோவை

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது கலெக்டர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சை

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

எனது அண்ணன் மகள் ஆனந்தி (வயது 43), மருமகன் சின்னத்துரை (45), அண்ணி கற்பகம் (65) ஆகியோர் கொரோனா பாதிப்பு காரண மாக கோவை சுங்கத்தில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் கடந்த மாதம் 26-ந் தேதி ஆனந்தியும், கடந்த 6-ந் தேதி சின்னத்துரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கற்பகம் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கூடுதல் கட்டணம் வசூல்

இந்தநிலையில் 3 பேரின் சிகிச்சைக்காக கடந்த 21-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை மனு மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.29 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தினேன். அதில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது வழங்கினர். மீதி தொகைக்கு ரசீது கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர்.

 எனவே இந்த மருத்துவமனையில் கட்டிய தொகைக்கு உரிய ரசீது கொடுக்காததாலும், கூடுதல் கட்டணம் வசூல் செய்ததற்கும் மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக இந்த மருத்துவமனை மீது 2 புகார்கள் வந்துள்ள நிலையில் நேற்று மேலும் ஒரு புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்