7,050 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

அரகண்டநல்லூர் மற்றும் கல்வராயன்மலை பகுதியில் 7,050 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

Update: 2021-06-08 17:04 GMT
திருக்கோவிலூர், 

கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சங்காடு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில்  பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்தனர்.
 பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் மீது போலீசார் வழக்குப்                    பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கல்வராயன்மலை பகுதியில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது அரவங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிரு்நத 750 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். 

அரகண்டநல்லூர்

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி, ஒட்டம்பட்டு பகுதியில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். 
இதை கட்டுப்படுத்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வீரபாண்டி, ஒட்டம்பட்டு ஆகிய பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு குழிதோண்டி பேரல்களில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை தோண்டி எடுத்து கீழே கொட்டி அழித்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே குடியநல்லூர் ஏரிக்கரை பகுதியில்  துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக சித்தலூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்