நடனம் ஆடி கொரோனா அச்சத்தை போக்கும் டாக்டர்

ஜோலார்பேட்டை அருகே கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் டாக்டர் ஒருவர் நடனமாடி கொரோனா அச்சத்தை போக்கி வருகிறார்.

Update: 2021-06-08 16:35 GMT
ஜோலார்பேட்டை

கொரோனா சிகிச்சை மையம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜோலார்பேட்டை அருகே அக்ராவரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்ட 700 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 600 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

கொரோனா தொற்றால் உயிர் பலியும் அதிகரித்தது. இதனால் தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகள் மிகவும் அச்சத்துடன் வருகின்றார்கள். அவர்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை போக்கும் வகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் டாக்டர் விக்ரம் குமார் நடனமாடி அவர்களுக்கு பயத்தை போக்குகிறார்.

நடனமாடும் டாக்டர்

 இதனால் கொரோனா நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொறறை மறந்து அவர்களும் இயல்பு நிலைக்கு மாறுகின்றனர். 
இதற்காக தினசரி டாக்டர் விக்ரம் குமார் இரவு நேரங்களில் நடனம் ஆடுகிறார். சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் செய்து மற்றவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமார் கூறுகையில் 
புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நோயாளிகள் மிகவும் பயத்துடனும், மன அழுத்தத்துடனும் வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு பயம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பைதுகாப்பு உடையணிந்து நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். இதனால் அவர்களும் நோயை மறந்து நடனம் ஆடுகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்