விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் சாவு புதிதாக 443 பேருக்கு தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர். மேலும் புதிதாக 443 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-08 16:24 GMT
விழுப்புரம்,

கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38,037 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 287 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 33,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்த 40 வயது பெண்ணும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே எய்யில் கிராமத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரும், மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டியும், அனந்தபுரத்தை சேர்ந்த 56 வயது பெண்ணும், நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவரும், கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டியும், 47 வயது பெண்ணும் ஆக மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 287-ல் இருந்து 295 ஆக உயர்ந்துள்ளது.

443 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 443 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,480 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,655 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,530 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்