ஈரோடு மாவட்டம் நசியனூரில் இமயமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ மலர்ந்தது- பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்
நசியனூரில் இமயமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ வகை பூ மலர்ந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.
பவானி
நசியனூரில் இமயமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ வகை பூ மலர்ந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.
பிரம்ம கமலம் பூ
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி பூவை அனைவரும் அறிந்ததுண்டு. அதுபோல் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் பூ இமயமலையின் ஒரு சில மலைச்சிகரங்களில் காணப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்ட இந்த பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மாலையில் சூரியன் மறைந்த பிறகு இந்த பூ பூக்கும் சிறப்பு பெற்றது. எனவே மலை சிகரங்களிலும் இந்த பூக்களை பார்ப்பது மிகவும் அரிதாகும்.
நட்சத்திரம் போல்...
இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்கள் ஈரோட்டிலும் மலர்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். டாஸ்மாக் ஊழியரான இவர் தன்னுடைய வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை வளர்க்க தொடங்கினார். அந்த செடி நன்கு வளர்ந்து காணப்படுகிறது. அதில் தற்போது 4 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்து பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த பூக்கள் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த பூக்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இரவில் மலரும்
இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி சரண்யா கூறும்போது, ‘பிரம்மன் படைத்ததாக கூறப்படுவதால் இதற்கு பிரம்ம கமலம் என பெயர் வந்ததாகவும், தெய்வீக சக்தியுடையதாகவும் நம்பப்படுகிறது. இரவு 10 மணிஅளவில் பூக்கும் இந்த பூ, மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பே வாடிவிடும். பூவின் வாசமும் சந்தனத்தை போல நறுமணத்துடன் உள்ளது’ என்றார்.