ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.

Update: 2021-06-07 22:36 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
கைகளில் சீல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிர மடைந்துள்ளது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 1,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர். மாவட்ட அளவில் மொத்த பாதிப்பில் ஈரோடு மாநகரில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் நபர்களை அடையாள படுத்தும் வகையில், கைகளில் சீல் வைக்கப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஆனால், இந்த முறை அந்த நடை முறைகள் எதுவும் கடைபிடிக்கப் படவில்லை. அதனால் எந்த வீடு தொற்று பாதித்த வீடு, தொற்று பாதிப்பில்லாத வீடு என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஒன்றாக கலந்து பழகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், ஈரோடு மாநகரில் தொற்று பாதித்த இடங்களை ஆய்வு செய்தார்.
ஸ்டிக்கர் ஒட்டும் பணி
அதன் பின்பு, தொற்று பாதித்த வீடுகள் தனியாக தெரிய வேண்டும். அதனால் கடந்த முறை செய்தது போல் இந்த முறையும் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதித்த வீடுகளில் தனித்தனியாக ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘மாவட்ட அளவில் 3-ல் ஒரு பங்கு மாநகர பகுதியில் கொரோனா பரவல் உள்ளது. தொற்று பாதித்த வீடுகளை எளிதில் அடையாளம் காணமுடியவில்லை. அதனால் கடந்த ஆண்டு செய்தது போல், தற்போது தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது' என்றனர்.

மேலும் செய்திகள்