சேலத்தில் பரிதாபம் மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி
சேலத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியை பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியை பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியை
சேலம் அழகாபுரம் திருமால்நகரை சேர்ந்தவர் கணேஷ் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சவுமியா (வயது 38). இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் சவுமியா வீட்டில் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டார். அப்போது மோட்டாரில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதையடுத்து அவர் மின் மோட்டாரில் கை வைத்து பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக சவுமியா மீது மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டார்.
பரிதாபமாக இறந்தார்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சவுமியா பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷபராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.