சேலம் மாவட்டத்தில் புதிதாக 997 பேருக்கு தொற்று: 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்தது 12 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 997 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-07 21:18 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 997 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஆயிரத்துக்கு கீழ் வந்தது
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கொரோனாவுக்கு 994 பேர் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு தினமும் ஆயிரத்துக்கு மேல் இருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்துபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதாவது, 997 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி, சங்ககிரி
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 285 பேர், எடப்பாடியில் 61 பேர், சங்ககிரியில் 56 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 53 பேர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 48 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 45 பேர், காடையாம்பட்டியில் 42 பேர், ஓமலூரில் 40, வீரபாண்டியில் 35 பேர், சேலம் ஒன்றியத்தில் 32 பேர், பனமரத்துப்பட்டியில் 31 பேர், வாழப்பாடியில் 25 பேர், தலைவாசலில் 23 பேர், ஆத்தூரில் 21 பேர், கெங்கவல்லியில் 19 பேர், நங்கவள்ளியில் 17 பேர், கொங்கணாபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், கொளத்தூரில் 9 பேர், ஏற்காட்டில் 8 பேர், மேச்சேரி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
திருப்பூரில் இருந்து சேலம் வந்த 14 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 12 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த 11 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 10 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 9 பேர், கோவையில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
10,669 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 751 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 10 ஆயிரத்து 669 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
12 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கொரோனாவுக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வந்தனர். இந்த நிலையில் உயிரிழப்புகள் ஓரளவு குறைந்துள்ளது. சேலத்தை சேர்ந்த பெண் உள்பட 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,130 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்