தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

திருவையாறு அருகே தனியார் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வங்கியில் பணம் இல்லாததால் அங்கு இருந்த இன்வெர்ட்டர் பேட்டரிகளை எடுத்து சென்று விட்டனர்.

Update: 2021-06-07 20:14 GMT
திருவையாறு;
திருவையாறு அருகே தனியார் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வங்கியில் பணம் இல்லாததால்   அங்கு இருந்த இன்வெர்ட்டர் பேட்டரிகளை எடுத்து சென்று விட்டனர். 
தனியார் வங்கி
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் மெயின் ரோட்டில் ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு தனியார் வங்கி உள்ளது.  இந்த வங்கியின் கிளை மேலாளராக தஞ்சாவூரை சேர்ந்த ஜவகர்(வயது 28) பணிபுரிந்து வருகிறார். 
இந்த வங்கி மூலம் வீடு அடமான கடன், மோட்டார் வாகன கடன், மற்றும் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி வங்கியில் இருந்த ரூ.67 ஆயிரத்தை எடுத்து வேறு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வங்கியை ஊழியர்கள் பூட்டி சென்று விட்டனர். 
பேட்டரிகள் திருட்டு
நேற்று காலை கிளை மேலாளர் ஜவகர், உதவி மேலாளர் கர்கல்ராஜ்(30) ஆகிய இருவரும் வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கியின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வர்கள் உள்ளே சென்று பார்த்தனர். 
அப்போது வங்கியிலிருந்த லாக்கர் திறக்கப்பட்டு, கண்காணிப்பு  கேமராக்கள் உடைக்கப்பட்டும் கிடந்தன. மேலும் வங்கி லாக்கரில் பணம் இல்லாததால் மர்ம நபர்கள் வங்கியில் இருந்த 2 இன்வெர்ட்டர் பேட்டரிகளை திருடி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை 
இது குறித்து வங்கி கிளை மேலாளர் ஜவகர் திருவையாறு போலீஸ் ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 
மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் வந்து வங்கியில் பதிவாகி இருந்த கைரேகையை பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மோப்ப நாய் ராஜராஜன் வங்கியில் இருந்து அருகே உள்ள  குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாடு வரை ஓடிச்சென்று திரும்பியது. இது குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 
தனியார் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்