கூடுதல் பணம் வசூலித்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கூடுதல் பணம் வசூலித்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-07 19:50 GMT
பெங்களூரு:

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கூடுதல் பணம் வசூலித்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

கூடுதல் பணம் பெறுவதாக...

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பெங்களூருவில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு போலீசார் சிரமப்பட்டு வருகிறாா்கள். இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகையை வசூலித்துவிட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500, மற்ற வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் (2020) அதே போன்றே அபராதம் வசூலிக்கப்பட்டது. 

தற்போது ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க வாகன ஓட்டிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதாவது அபராத தொகை கொடுத்தது போக போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வாகனம் விடுவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

போலீசார் மீது நடவடிக்கை
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை மீறியதால் தான் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அவர்கள் அபராத தொகையை மட்டும் செலுத்தி தங்களது வாகனங்களை எடுத்து செல்லலாம். ஏற்கனவே விதிமுறைகள் மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால், அதனையும் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும். போலீசாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

வாகனங்களை விடுவிக்க கூடுதல் கட்டணம் வசூலித்தால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சும்மா விடுவதில்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனா காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றார்.

மேலும் செய்திகள்