நெல்லையில் சமையல் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சமையல் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை, ஜூன்:
தங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி நெல்லையில் சமையல் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தொழிலாளர்கள்
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தை சேர்ந்த கியாஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கியாஸ் சிலிண்டருடன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முறையான மாதச்சம்பளம், இ.எஸ்.ஐ., பி.எப். போன்ற சலுகைகளை பெற்றுத் தர வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளித்து பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் இறக்கும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி அளிக்க வேண்டும். இதை வருகிற 30-ந் தேதிக்குள் நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளனர்.
புரோகிதர்கள்-மருத்துவ பணியாளர்கள்
குருகிருபா வேத சிவாகம பாடசாலையை சேர்ந்தவர்கள் முதல்வர் சுரேஷ் சிவம் தலைமையில் கலெக்டர்களுக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கால் புரோகிதர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்கள் ஆலயங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அர்ச்சகர்கள், புரோகிதர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய பல்நோக்கு மருந்துவ பணியாளர்கள் கொடுத்த மனுவில், “நாங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு தினக்கூலியாக தினமும் ரூ.400 சம்பளம் வழங்குகிறார்கள். இந்த சம்பளம் எங்களுக்கு போதவில்லை. இந்த கொரோனா ஊரடங்கால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
சுகாதாரக்கேடு
அம்பை அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த தளவாய்சாமி என்பவர் கடந்த 21-ந் தேதி மணிமுத்தாறு அருகே நடந்த விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தனக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன் கொடுத்த மனுவில், “சிவந்திப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா தெரு, முத்துராமலிங்கம் தெரு ஆகியவற்றில் கழிவுநீர் சாலையில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவே அந்த தெருக்களில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.