நேபாளத்தை சேர்ந்த 6 பேர் கைது

பெங்களூருவில் வீடுகளில் திருடி வந்த நேபாளத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-07 19:35 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் வீடுகளில் திருடி வந்த நேபாளத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

6 பேர் கைது

பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டுப்போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தார்கள். 

இந்த நிலையில், ராமமூர்த்திநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் நேபாளத்தை சேர்ந்த ராஜேஷ் கடக் (வயது 26), சச்சின்குமார் (24), முகேஷ் கடாகி (22), கரண் கடக் (19), ராஜுசிங் (32), எக்கிராஜ் கடக் (45) என்று தெரிந்தது. இவர்கள் 6 பேரும் பெங்களூருவில் தங்கி இருந்து அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

ரூ.17 லட்சம் மதிப்பு

வேலைக்கு செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். பின்னர் அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை 6 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.

 இவ்வாறு திருடும் தங்க நகைகளை, நேபாளத்திற்கு எடுத்து சென்று விற்று வந்துள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் வீடுகளில் திருடி வந்ததாக 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 348 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் 6 பேரையும் கைது செய்திருப்பதன் மூலம், ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் நடந்த 5 திருட்டு வழக்குகள் உள்பட 6 திருட்டில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான 6 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்