புதிய போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் பொறுப்பேற்று கொண்டார்.
தர்மபுரி:
போலீஸ் சூப்பிரண்டு
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த பிரவேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கலைச்செல்வன் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் 52-வது போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்டத்திலுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சொந்த ஊர் அந்தியூர்
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வன் கடந்த 2012-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து திருச்சி திருவெரும்பூர் உட்கோட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு வயது 38. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த இவர் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
இதனிடையே தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வன் நேற்று மாவட்டத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சினை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.