சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட தொடங்கின

சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. அலுவலர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினார்கள். டோக்கன் வழங்கப்பட்டு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

Update: 2021-06-07 18:13 GMT
காரைக்குடி,

சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. அலுவலர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினார்கள். டோக்கன் வழங்கப்பட்டு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

அரசு அலுவலகங்கள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 14-ந்தேதி வரை முழு ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீதம் பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
 பணியாளர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றி போதிய சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி தெளித்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்களையும் போதிய சமூக இடைவெளியுடன் வந்து செல்ல அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டனர்.

50 சதவீத டோக்கன் வினியோகம்

இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு இயங்க தொடங்கியது. இதை தவிர நாள் ஒன்று 50 சதவீத டோக்கன் மட்டும் வழங்கி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதனால் நேற்று காலை சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் வாங்க பொதுமக்கள் திரண்டனர். 50 சதவீத டோக்கன் மட்டும் வினியோகிக்கப்பட்டது. மற்றவர்களை மறுநாள் வருமாறு பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
 காரைக்குடி பகுதியில் நேற்று செஞ்சை மற்றும் முத்துப்பட்டிணம் ஆகிய 2 இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் பத்திர பதிவு செய்வதற்காக வந்தனர். இதில் முத்துப்பட்டிணம் பகுதியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் 10 டோக்கன் மட்டும் மதியம் 1 மணி வரை வழங்கப்பட்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் செஞ்சை பகுதியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 25 டோக்கன் வரை பெற்று பத்திர பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று செஞ்சை பகுதி பத்திர பதிவு அலுவலகத்தில் கலப்பு காதல் திருமணம் செய்ய வந்த இளம்ஜோடி ஒன்று அங்கு வந்து காத்திருந்தது. இதையடுத்து அவர்களை உள்ளே அழைத்த பத்திர பதிவு அலுவலர்கள் முறைப்படி அந்த ஜோடியின் ஆவணங்களை சரி செய்து நேற்று திருமண பதிவு செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பத்திரப்பதிவு நடந்தது.

மேலும் செய்திகள்