கரூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததால் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டன. இதில் டெக்ஸ்டைல் நிறுவனங்களில் குறைவான பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Update: 2021-06-07 18:09 GMT
கரூர்
ஊரடங்கு தளர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அதிகம் பாதிப்பு காரணமாக கரூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருந்தன. 
காய்கறி-மளிகை கடைகள் திறப்பு
இதில், கரூர் நகரப்பகுதிகளில் நேற்று காலை மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். 
கரூர் மார்க்கெட் மற்றும் காந்தி கிராமத்தில் ஒரு சில மீன்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரு சிலர் மட்டுமே வந்து பத்திரங்கள் பதிவு செய்தனர். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கியன.  
டெக்ஸ்டைல் நிறுவனங்கள்
கரூர் செங்குந்தபுரம், காமராஜபுரம், வையாபுரிநகர், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் திறந்திருந்தன. இங்கு குறைந்த அளவிலான பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டு வேலை செய்தனர். 
ஊரடங்கு தளர்வு காரணமாக இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். அவர்களில் தேவையில்லாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து எச்சரித்து அனுப்பினர். 
குளித்தலை
குளித்தலை பகுதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று மளிகை கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள் போன்ற கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல குளித்தலை காவேரி நகர் பகுதியில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டது. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சில ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்த கடைகள் தவிர ஒரு சில இடங்களில் உள்ள பெட்டிக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன ரோந்து பணியில் சென்ற அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்தலின் பேரில் அந்த கடைகள் பின்னர் மூடப்பட்டன.
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கரைப்பாளையம், கந்தபாளையம், தவிட்டுப்பாளையம், புகளூர், பாலத்துறை, புன்னம்சத்திரம், குட்டக்கடை, மூலிமங்கலம், குறுக்குபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருந்தன. கடந்த 2 வாரங்களுக்கு பிறகு கடைகள் திறந்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.
தோகைமலை
தோகைமலை கடைவீதியில் பூ, பழம், மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். மாலை 5 மணிக்கு மேலும் சில கடைகள் திறக் கப்பட்டு இருந்தன. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் திறந்து இருந்த கடைகளை அடைக்க அறிவுறுத்தினர். அதன்படி வியாபாரிளும் தங்களது கடைகளை அடைத் தனர்.

மேலும் செய்திகள்