உரிய அனுமதியின்றி செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையத்துக்கு சீல்
உரிய அனுமதி பெறாமல் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பொள்ளாச்சி,
உரிய அனுமதி பெறாமல் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத ரத்த வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பரிசோதனை மையத்துக்கு ‘சீல்’
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டது. இந்த மையம் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மேற்பார்வையில் தாசில்தார் அரசகுமார் தலைமையில் தெற்கு ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், கொரோனா தடுப்பு டாக்டர் ரஞ்சித்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த ஆய்வகம் உரிய அனுமதி பெறாமலும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கொரோனா பரிசோதனை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மருத்துவ கழிவுகள்
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கொரோனா பரிசோதனை மையம் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது. மேலும் அந்த மையத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை.
மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை. இதற்கிடையில் பரிசோதனைக்கு வரும் நபர்களிடம் சரியான முகவரி, செல்போன் எண்ணை வாங்காமல் பரிசோதனை செய்து உள்ளனர்.
இதனால் தொற்று பாதித்த நபர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த கொரோனா பரிசோதனை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரத்த வங்கிக்கு அபராதம்
இதேபோன்று வெங்கடேசா காலனியில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து அங்கு நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரத்த வங்கியில் மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றபடாததும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த ரத்த வங்கிக்கு 2-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் விதிமுறைகளை மீறினால் ரத்த வங்கிக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.